எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்றால் அனைவரிடத்திலும் பொருள் அல்லது பொருளீட்டும் திறமை இருக்க வேண்டும். திறமையினால் வரும் பொருளை சரியாக முதலீடு செய்தால் மட்டுமே பொருளைப்பெருக்கி, இல்லாமை இல்லாத நிலையை அடைய முடியும்.
பொருளைப்பெருக்க வாய்த்திருக்கும் ஒரு சிறந்த வழி பங்குச்சந்தை முதலீடு. சிறுதொகையாக இருந்தாலும் பங்குச்சந்தையில் எளிதாக முதலீடு செய்ய கூட்டுதொகையம் வழி முதலீடு (மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund) மிகவும் சிறந்தது.
அனைவராலும் (சமூக, பொருளாதார கட்டமைப்பில் எந்த நிலையிலிருந்தாலும்) பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். அனைவரும் எளிய முறைகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு ஏற்றதாக கூட்டுதொகையம் வழி முதலீட்டு முறை (மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund) வடிவமைக்கப்பட்டுள்ளது.
பணத்தை முதலீடு செய்யாமல் கையில் வைத்திருந்தால் அதன் மதிப்பு தினந்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. வங்கியில் வைப்புத்தொகையாக வைத்திருந்தாலும் அதில் கிடைக்கும் வட்டியானது பணவீக்கத்திற்கு ஈடாக இல்லை. நிலமாக வைத்திருந்தாலும் அவசரத்திற்கு நிலத்தை சந்தை விலைக்கு விற்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றாலும் அதன் பாதுகாப்பு முக்கியத் தேவை.
தங்களிடமுள்ள சிறிய தொகையைக்கூட கூட்டுதொகைய முறையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முடியும். அதற்குத்தேவை எல்லாம் ஒரு வங்கிக்கணக்கு மட்டும் தான். குறைந்த பட்சமாக 150 ரூபாயும் (ரூபாய் 500 இருந்தால் மிகவும் நல்லது) வங்கிக்கணக்கும் இருந்தாலே கூட்டுதொகைய முதலீட்டை ஆரம்பித்து விடலாம்.
கூட்டுதொகைய முதலீட்டு முறை ஒரு கனி மரத்தின் விதையை ஊன்றுவது போலாகும். விதையை ஊன்றி அதை நல்ல முறையில் கவனித்து வந்தால் அது கன்றாகி, மரமாகி நல்ல பலன்களைக் கொடுக்கும் வாய்ப்பு அதிகம். அது போல கூட்டுதொகைய முறையில் சிறுதுளியாய் ஆரம்பிக்கும் பங்குச்சந்தை முதலீடு பெருவெள்ளமாய் வருங்கால பயன்பாட்டிற்கு வந்து சேரும்.
கூட்டுதொகைய முதலீடு அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப்பங்குகளிலும் கடன் பாத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. அதனால் முதலீட்டின் வளர்ச்சி பங்கசந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அமையும். குறுகிய காலத்தில், பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சி அடையுமானால் முதலீட்டின் மதிப்பு முதலீடு செய்த அசலை விட குறைவதற்கும் வாய்ப்பு உண்டு.